உங்கள் ஜாதகத்தில் லக்கினாதிபதி எங்கே இருக்கிறார், அதற்கு என்ன பலன்?
ஒரு ஜாதகத்தில் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி ஆகியவற்றின் மூலம் அந்த ஜாதகரின் குண நலன்கள் நடை உடை பாவனைகள் மற்றும் வாழ்க்கையில் பெரும் உயர்வான நிலை சமுதாயத்தில் கிடைக்கும். மரியாதை போன்றவற்றை அறிந்து கொள்வதோடு, மட்டுமல்லாமல் அவருடைய மனதில் தோன்றக்கூடிய சிந்தனைகள் நேர்மறையாக இருக்குமா? அல்லது எதிர்மறையான சிந்தனைகள் கொண்டவர்களா? என்பதையும் தெளிவாகப் பிரித்து அறியலாம். சுருக்கமாக ஒரு மனிதன் பரோபகார சிந்தனை கொண்ட நல்லவனா? அல்லது வஞ்சக எண்ணம் கொண்ட நெஞ்சம் உடையவனா? என்பதனை எளிதில் பிரித்தறியலாம்.
எந்த லக்னமாக இருந்தாலும் இலக்கினத்தில் லக்கினத்தின் அதிபதியான கிரகம் ஆட்சி பெற்ற நிலையில், லக்னத்திலேயே இருக்குமானால் அவர்களுக்கு நல்ல ஆயுள் பலம், புகழ், சம்பத்து செல்வச் சேர்க்கை, சமுதாயத்தில் மதிப்பு மரியாதை, சொந்தபந்தம் அனைவரையும் ஆதரிக்கக் கூடிய குணநலம், அமைதியான தன்மை, தேஜஸுடன் கூடிய அழகான முகம், எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அத்தனையும் வெற்றி பெறக்கூடிய மனதைரியம், இறுதிவரை தனது காலில் தானே நிற்கக்கூடிய வலிமை, அத்தனையும் கொடுத்துவிடும். லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பது முதல் தரமான, அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். முதலாவதாக அந்த கிரகம் ஆட்சி என்ற முறையில் வலுப்பெற்று விடும். அதுமட்டுமல்லாமல் திரிகோணத்தில் சேர்ந்து இடத்திலும் வலுப்பெறும். எனவே இவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மற்ற கிரக அமைப்புகளும் நன்றாக அமர்ந்துவிட்டாள் யோக பலன்களை மட்டும் தான் தன்னுடைய வாழ்நாளில் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள்.
லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தாலும், வக்கிரம் பெற்ற நிலையில் இருந்தால் அல்லது அவற்றுடன் ராகு, கேது போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் இருந்துவிட்டால், அது குடும்பத்தாராலும் சமுதாயத்தினர் ஆகும். வெறுக்கக் கூடிய சூழ்நிலைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சற்று சுயநலவாதியாக இவர்களை மற்றவர்களுக்கு காட்டிவிடும். எனவே, இம்மாதிரியான கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு நிறைய விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பொதுவாக, இவர்கள் பிறந்த இடம் ஒன்று, வாழும் இடம் மற்றொன்றாகதான் தான் அமையும். தனது பூர்வீக இடத்தில் முன்னேற்றம் இல்லாதவர்களாக தான் இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சற்று அதிகமான பிரயாசை படுபவர்கள் ஆகவும் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள்.
லக்கினாதிபதி, பொதுவாக தான் அமர்ந்துள்ள பாவத்தை வளர்ச்சி பெறச் செய்வார். லக்கினாதிபதி குடும்பஸ்தானம் எனப்படும், இரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தாள் இவர்களுடைய குடும்பம் நன்றாக விருத்தியடையும். மனைவியோடு கூடிய சந்தோஷமான வாழ்க்கை வாழக் கூடியவர்களாகவும், அவர்களுக்கு தேவையான பொருளாதார வசதிகள் கிடைக்கப்பெற்று இவர்களுடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்து விடும்.
இரண்டாம் இடத்தில் அமர்ந்துள்ள லக்கினாதிபதி பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்று, அல்லது வக்கிரம் பெற்ற நிலையில், இருந்தால் பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடிய குடும்பம் அமையும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எதிராக நிற்க கூடிய நிலை ஏற்படலாம். உத்தியோகத்திற்காகவோ, அல்லது சண்டை சச்சரவுகள் ஏற்பட்டோ கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியான முன்னேற்றம் என்பது கடும் உழைப்பிற்குப் பின் தான் கிடைக்கும். அதுவும் இடம் விட்டு இடம் மாறி போய்தான் சம்பாதிப்பார்கள், என்பது போன்ற பலன்களை கொடுத்துவிடும். பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் அல்லது பார்த்தாலும் குருபார்வை என்று ஒன்று கிடைத்து விட்டால், இவை அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும். எனவே நல்ல பலன்களை அனுபவிப்பார்கள்.
லக்கினத்திற்கு அதிபதியான கிரகம் மூன்றாமிடம் எனப்படும் உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாள், அதிலும் குறிப்பாக சுப பலமாக அமர்ந்திருந்தாள் தன்னுடைய வாழ்நாளில் பல வேலைக்காரர்களை வைத்துக் கொள்ளவேண்டிய வசதியான வாழ்க்கை அமையும். நிறைய பேர் இவர்களிடம் வேலை பார்ப்பார்கள். பண்டைய காலங்களில் உண்கலம் அதாவது ஒருவர் உணவு சாப்பிடக்கூடிய தட்டு அவர் காதில் போட்டு இருக்க கூடிய கடுக்கண் போன்றவற்றை பற்றி விரிவாக கூறுகிறார்கள். ஆனால் தற்காலங்களில் சமுதாயத்தில் மிகுந்த கௌரவம் பெற்றவர்களாகவும், இவருடைய சொல்லுக்கு ஒரு பெரும் கூட்டமே கட்டுப்படும் நிலையிலும் இருப்பார்கள். நல்ல அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்திருப்பார்கள். தன்னுடைய சகோதர சகோதரிகளின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாகவும், குடும்பத்தின் மீது அன்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மூன்றாம் இடத்தில் அமர்ந்துள்ள இலக்கினாதிபதி பாவ கிரக சம்பந்தம் அல்லது வக்கிரம் போன்ற பலன்கள் ஏற்பட்டுவிட்டால், குரு பார்வை இருந்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குரு பார்வை இல்லாவிட்டால், அடிமை தொழில் செய்பவர்களாகவும் அல்லது நீச தொழில் செய்பவர்களாகவும் தனது கௌரவத்தை விட்டு கீழான நிலையில் உள்ளவர்களுடன் பழக்கவழக்கம் கொண்டவர்களாகவும், அதிகமான பிடிவாதமும், கோபப்படுபவர்களாக இருப்பார்கள்.
இது ஒரு நல்ல யோகம் என்று கொள்ளப்படுகிறது.
லக்கினத்தின் அதிபதியான கிரகம் நான்காவது வீட்டில், சுப பலமாக இருப்பது பல நல்ல விஷயங்களை கொடுக்கும். நான்காம் இடம் என்பது சதுர்த்த கேந்திரம் எனப்படும், ஸ்தானம் ஆகும். இந்த இடத்தை கொண்டுதான் வாகனம் சொத்து சேர்க்கை வீடு வாசல் போன்றவற்றை பற்றி கூறுகிறோம். இங்கு லக்கினாதிபதி சுப பலத்துடன் அமர்ந்திருந்தாள், அவர்களுக்கு நல்ல வீடு, வசதியான வாழ்க்கை, வாகன யோகம், சமுதாய அந்தஸ்து போன்ற அனைத்தும் கிடைத்துவிடும். பண்டைய காலங்களில் கன்று காலி விருத்தி என்று கூறினார்கள். அதாவது நிறைய ஆடு மாடு வைத்திருப்பவர்கள் தான், பழைய காலங்களில் மிக வசதியானவர்களாக கொள்ளப்பட்டார்கள். ஆனால் தற்காலங்களில் பேங்க் பேலன்ஸ் அதிகமாக உள்ளவர்கள் தான் வசதியானவர்கள் என்று ஆகிவிட்டது.
மேலும், ஒரு மனிதன் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே உருவாகிவிடும். அதுபோன்று இவருடைய இவர்களுடைய செல்களுக்கு ஆமாம் சாமி போடுவதற்கென்று ஒரு பெரும் கூட்டமே இருக்கும். இந்த ஜால்ரா கூட்டத்தில் இருந்து சற்று எச்சரிக்கையாக விலகி இருக்க வேண்டும், என்பது கவனிக்கத்தக்கது. பாவ பலத்துடன் அதாவது, பாவ கிரகங்களின் சேர்க்கை பார்வை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட லக்கினாதிபதி 4ஆம் இடத்தில் அமர்ந்தால், நிச்சயமாக பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
வாகன வசதிகள் சொந்த வீடு வாசல் போன்றவை அமைவது, கால தாமதம் ஆகிவிடும். சொத்துக்கள் வாங்கினாலும் அவற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது, தாயாரின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும், அல்லது தாய்க்கும் தனக்குமான ஒற்றுமையை குறைப்பது, இருவரும் ஒன்றாக இல்லாமல் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பது போன்ற, மாதிரியான சூழ்நிலைகளை உருவாக்கிவிடும். பெரும்பாலும் இவர்கள் பிறந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் சென்று வாழ்ந்து வரும் போது இது போன்ற சிரமங்கள் பலவற்றை தவிர்த்து விடலாம், என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் 4-ஆம் இடம் என்பது வசிப்பிடம் ஆகும்.
லக்கினத்தில் ஆட்சி பெறக்கூடிய லக்கினாதிபதி 5ஆம் இடத்தில் சுப பலத்துடன் நின்றிருந்தாள், அவர்கள் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள். 5-ஆம் இடம் என்பது திரிகோண ஸ்தானம் ஆகும். மனம் நிறைந்த குழந்தைகள் சந்தோஷமான மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை பூர்வீக சொத்துக்கள் போன்றவற்றுடன் வசதியான வாழ்க்கை அமையும். கல்வியிலும் மிகச் சிறந்து விளங்குவார்கள். புத்திசாலித்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். தனது குழந்தைகளால் மனம் மகிழ்ச்சி அடைவார்கள்.
மகான்கள் யோகிகள் சித்தர்கள் சாதுக்கள் அவர்களின் ஆசி பெற்றவர்களாகவும், பக்திமார்க்கத்தில் சிறந்தவர்களாகவும், அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற மேலான எண்ணம் கொண்டவர்களாகவும், தெளிவான சிந்தனைகளுடன் விலாசமான அறிவுடன் பரந்த வாசிப்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பல பேர் இருக்கக்கூடிய கூட்டங்களில் கூட தனித்துவமாக தெரியக்கூடிய தேஜஸ் மற்றும் புத்திசாலித்தனம் இவர்களிடம் பளிச்சிடும்.
லக்கினாதிபதி பாவ கிரகங்களுடன் சேர்ந்து அல்லது பார்வை பெற்று இதே இடத்தில் இருந்தால் சமுதாயத்தோடு ஒத்துப்போவது சிரமமாக இருக்கும். எனவே, இவர்கள் யார் கூறும் கருத்தையும் எதிர்த்துப் பேச தயங்க மாட்டார்கள். பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும், பெரிய நம்பிக்கை ஒன்றும் இருக்காது. எல்லோரும் கோவிலுக்கு செல்கிறார்கள் என்பதற்காக நானும் போகிறேன், என்பது போன்ற மனநிலை தான் இருக்கும். சற்று சுயநலவாதி ஆகவும் இருப்பார்கள். தனது குழந்தைகளால் மனக்கவலை அடைபவர்கள் ஆகவும், தனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக வேண்டியது வரும். தனது குடும்பத்தார் மற்றும் சொந்த பந்தங்கள் இடம் எவ்வளவுதான் செலவு செய்தாலும் நல்ல பெயர் எடுப்பது என்பது குதிரைக்கொம்பு தான்.
லக்கினத்தில் ஆட்சி பெறக்கூடிய லக்கினாதிபதி ஆறாவது வீட்டில் அமர்ந்திருந்தால் இந்த ஜாதகருக்கு முகமறியாத எதிரிகள் கூட இருப்பார்கள். நேருக்கு நேர் நின்று சண்டை போடுபவர்களை கூட நம்பி விடலாம், ஆனால் இவர்களுக்கு எதிரிகள் கூடவே இருப்பார்கள். இந்த ஜாதகர் அவர்களிடம் உதவி பெற்றுக் கொண்டு அவரையே மட்டம் தட்டி பேசக்கூடிய நண்பர்கள் நிறைய இருப்பார்கள். வயதான காலங்களில் தனது வாரிசுகள் அல்லது சொந்தபந்தங்கள் கவனிப்பு அதிகம் தேவைப்படும். சற்று உடல்நலக் குறைவுடன் இருந்தாலும் மற்ற கிரகங்களின் அமைப்பைக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை ஒளிமயமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் ஆயுள் குறைந்துவிடும் என்று அர்த்தம் அல்ல.
லக்கினாதிபதி 6ஆம் இடத்தில் அமர்ந்து ஆறாம் இடத்து அதிபதியும் நீசம் பெற்று விட்டாள், அவர்களுக்கு உடல் ரீதியான உபாதைகள் சற்று கூடுதலாக இருக்கும். வயிறு தொடர்பான தொல்லைகள், மறைமுக எதிரிகளால் பிரச்சனை, பிளாக் மேஜிக் எனப்படும். செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆழமான இறை பக்தியினால் இம்மாதிரியான கஷ்டங்களில் இருந்து இவர்கள் வெளியேற முடியும். ஆறாம் இடத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய லக்னாதிபதியை குரு பார்த்தால், கோடி குற்றம் நீங்கி விடும் என்பதற்கு இணங்க, மேற்கண்ட அத்தனை தோஷங்களும் விலகி விடும்.
லக்கினத்தில், அதிபதியான கிரகம் லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் இருந்தால், மனைவியின் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். மனைவியின் சொற்களை கேட்டு நடப்பவர்கள் ஆக இருப்பார்கள். இவர்களுக்கு தான் என்ற அகந்தை சற்று கூடுதலாகவே இருக்கும். குடும்ப பொறுப்பு முழுவதையும் மனைவியே பார்த்துக் கொள்வார் என்பதால். மிகவும் மகிழ்ச்சியானவராகவும், நிம்மதியானவராகவும், இருந்து கொண்டிருப்பார். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்வார்கள். மனதில் காம எண்ணங்கள் அடிக்கடி உருவாகும். இவர்கள் தேடி போகாமலே பெண் நண்பர்கள் நிறைய கிடைப்பார்கள். மிகுந்த ஆசை கொண்டவர்களாகவும் பெண்களின் மனதை கவரும் குணங்களுடனும் இருப்பார்கள். ஒரு தொழில் செய்து கொண்டிருக்கும் பொழுது, மற்றொரு தொழிலை பற்றிய எண்ணம் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். மனைவி வீட்டாரோடு சுமூகமான ஒற்றுமை இருந்து வரும்.
லக்கினத்தின் ஆட்சியாக கூடிய லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் சுப பலத்துடன் இருந்தால், வலுவான ஆயுள் உள்ளவனாக இருப்பான். பொதுவாக எட்டாம் வீட்டில். அதாவது மறைவு ஸ்தானத்தில். லக்கினாதிபதி நின்றால் ஆயுள் பலமாக இருக்குமா? என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவ்வாறு அல்ல, எட்டாம் இடத்தில் சுப பலமாக இருந்தால் நல்ல ஆயுள் பலமும், அசுப பலமாக இருந்தால், சற்று சிரமத்துடன் கூடிய நீண்ட ஆயுளும் அதாவது, உடல் ரீதியான தொல்லைகள், அல்லது பொருளாதார ரீதியான கஷ்டங்களுடன, உடன் நீடித்த ஆயுளுடன் வாழ்ந்து வருவார்கள்.
பூர்வீகத்தை விட்டு இடம் மாறி அமர்ந்திருக்க கூடியவர்களாகவும், குடும்பத்தாரின் ஒற்றுமை இல்லாதவர்களாகவும், சொந்தங்களால் பெற்றவர்களாகவும், அல்லது இவருக்கு பிரயோஜனம் இல்லாத சொந்தபந்தங்கள் மட்டுமே அமைவதாகவும், புத்திர பாக்கியத்தில் சற்று காலதாமதம் குறைபாடு, போன்றவை கொண்டவர்களாகவும் அமைவார்கள். இவர்கள் சட்டவிரோதமான தொழில்களை மேற்கொண்டால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வந்துவிடும். நேர்மையான வழியில் தொழில் செய்தால் நிச்சயமாக முன்னேற்றம் உண்டாகும்.
லக்கினத்தின் அதிபதி ஒன்பதாவது வீட்டில் அதாவது பாக்கிய ஸ்தானத்தில் இருந்தால், பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்களாக இவர்களுடைய முன்னோர்கள், நல்ல புகழையும், பெயரையும் பெற்றவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள். தன்னைவிட மூத்தவர்களிடம் மிகுந்த மரியாதையும், பக்தியும், கொண்டவர்களாக இந்த ஜாதகர்கள் விளங்குவார்கள். நேர்மையான வழியில் செல்பவர்கள் ஆகவும், வாக்கு மற்றும் நாணயத்தை நூறு சதவிகிதம் காப்பாற்றுவார்கள் ஆகவும், தான தர்மங்கள் செய்வதில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாகவும், தெய்வீக வழிபாடுகள் ஸ்தல யாத்திரைகள், திருப்பணிகள் உழவாரப் பணிகள், மற்றும் சமுதாய முன்னேற்ற பணிகள், போன்றவற்றில் நல்ல ஈடுபாடு காட்டுவார்கள்.
வாகன யோகம், நல்ல புகழ், பெற்று விளங்குவார்கள். ஒன்பதாம் இடத்தில் நிற்கக்கூடிய லக்கினாதிபதி பலம் பெற்றுவிட்டால் சூழ்ச்சி மிக்கவர்களாகவும், பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணமோ! அல்லது பிறர் வைத்திருக்கும் பொருளின் மீது ஆசை படுவதோ! அதிகமாக இருக்கும். வெளியில் நல்ல பெயரையும், புகழையும், பெற்றாலும் கூட மனதினுள் கருப்பு இருக்கும்.
லக்கினாதிபதி பத்தாம் இடத்தில் பலத்துடன் நின்றால், பூர்வீக சொத்து மிகுந்த இடத்தில் பிறந்து இருப்பார். சொந்தமாக வண்டி வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் கொண்ட குடும்பத்தில் வசித்து வருவார். இவர்களுக்குப் பெரும் புகழும், அதிக சிரத்தை இல்லாமலே கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள் எந்நேரமும் தொழிலைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். வருமானத்தைப் பெருக்கிக் கொண்டே இருப்பவர்கள். கௌரவப் பதவிகள் இவர்களைத் தேடிவரும். பெரும்பாலும், இவர்கள் இருக்கும் இடங்களில் தலைமை பதவிகளில் இருப்பார்கள் அல்லது அதிகார மையமாக இருப்பார்கள்.
சமுதாயத்திற்கு மிகவும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தவர்களாகவும் வயதில் மூத்தவர்கள் உடன் மிகுந்த மரியாதை கொண்டவர்களாகவும் தனது தாய், தந்தையரை போற்றி, பேணி காப்பவர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்க கூடிய மிக நல்ல மனிதர்கள்.
லக்கினாதிபதி லாப ஸ்தானம் எனப்படும், பதினொன்றாம் வீட்டில் பலம் பெற்ற நிலையில் நின்றால், அவர்கள் செய்யும் தொழில்கள் அத்தனையும் லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல விருத்தி இருக்கும். தன்னுடைய தந்தை சம்பாதித்ததை விட, இவர் கூடுதலாக சம்பாதிப்பார். தனக்கு வயதுக்கு மூத்த சகோதர, சகோதரிகளின் ஒற்றுமையும் ஆதரவும், அவர்களால் பொருளாதார விருத்தியும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். நீண்ட ஆயுள் பலம் கொண்டவர்களாகவும், சமுதாயத்தில் புகழ் பெற்றவர்களாகவும், வாகன வசதி, மிகப் பெரிய வீடுகளில் ஜீவனம் பண்ணக்கூடிய யோகம், போன்றவை உண்டாகும். வாழ்நாளின் இறுதிக் காலம் வரை தன் காலிலேயே நிற்க கூடியவர்களாக இருப்பார்கள். பொருளாதாரம் மிகச் சிறப்பான முன்னேற்றம் நிலையை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும் பலன்களை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்கினத்தில் ஆட்சி பெறக்கூடிய லக்கினாதிபதி, மோட்ச ஸ்தானம் என்னும் 12ஆம் வீட்டில் சுப பலத்துடன் என்றால், நல்ல வருமானம் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் கையில் சேமிப்பு என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும். இவர்கள் பணம் சேர்ப்பதை விட, புண்ணியத்தை, மிக அதிகமாக சேர்ப்பார்கள். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போய்க்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு வேலை இவரைத் தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்கும். தூங்கும்போது கூட தனது தொழில் பற்றிய சிந்தனைகள், வருமானத்தைப் பற்றிய சிந்தனைகள் உடையவர்களாக, இருப்பார்கள். லக்கினாதிபதி வக்கிரம் பெற்று பாவ கிரகங்களின் ஆதிக்கம் இருந்தால் சரியான தூக்கம் இல்லாதவர்கள் ஆகவும், நிலையாக ஒரு இடத்தில் இல்லாமல் தொடர்ந்து இடமாற்றம் செய்து கொண்டே இருப்பவர்கள் ஆகவும், சற்று சுறுசுறுப்பு தன்மை குறைவாகவும் இருக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் எடுப்பது சிரமமான காரியம்தான். எந்த ஒரு விஷயத்தையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக் கூடிய குணம் இவர்களுக்கு அதிகமாகவே உண்டு. சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் இருந்து வெளியில் சென்று வசித்து வருவார்கள்.
திருச்சிற்றம்பலம் !!!