அளவில்லா யோகத்தை அள்ளித்தரும் ஜாதகம் Jeyalalitha horoscope

 பொதுவாக, ஜாதகத்தில் பலமிக்க ஸ்தானங்கள் என்பது, திரிகோண ஸ்தானம் ஆகும்.  இது லக்கினம் மற்றும் ஐந்தாம் இடம் ஒன்பதாம் இடம் ஆகிய மூன்று இடங்களை குறிக்கிறது. இந்த ஸ்தான அதிபதிகள் பலம் பெற்ற நிலையில் இருந்தாலோ, அல்லது பரிவர்த்தனை பெற்ற நிலையில் இருந்தாலோ, அந்த ஜாதகம் யோக ஜாதகமாக இருக்கும். அதிலும் இவை தொடர்புடைய திசை, புத்திகள் வந்தால், மிகுந்த யோகத்தை செய்யக்கூடிய ஜாதகமாக ஏற்பட்டு, வாழ்க்கையில் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவிப்பார்கள். 

  இதற்கு அடுத்தபடியாக கேந்திர ஸ்தானம் என்பது, பலம் பெற்ற ஸ்தானங்கள் ஆகும்.  கேந்திரம் என்பது இலக்கினம், நான்காமிடம், ஏழாமிடம், பத்தாமிடம் ஆகியவற்றைக் குறிப்பதாக, ஒரு ஜாதகத்தில் கேந்திரத்தில் பாவ கிரகங்கள் திரிகோணத்தில் சுபகிரகங்கள் அமைவது சிறப்பு என்பது ஜோதிட விதி. 

  கேந்திர ஸ்தானம், திரிகோண ஸ்தானமும் பலம் பெற்ற நிலையில், இருக்கின்ற ஜாதகங்கள் யோக ஜாதகங்கள் எனப்படும்.  

இதற்கு அடுத்தபடியாக, இருக்கின்ற ஸ்தானம் உபஜெய ஸ்தானம் எனப்படும். இவை 3ஆம் இடம், 6ஆம் இடம், மற்றும் 11ஆம் இடம் ஆகும். இவைகளில் மூன்றாம் இடமும், ஆறாம் இடமும், மறைவு ஸ்தானங்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மறைவு ஸ்தானங்களில் ஒரு கிரகம் அமர்வது பாதகமான பலன்களை ஏற்படுத்தும் என்று, ஜோதிட விதிகள் அறிவுறுத்துகின்றன. ஜோதிடத்தை, ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, படித்து தெரிந்து கொள்வதை விட, ஜோதிடத்தை புரிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. 

  ஒரு சில ஜாதகங்களில், இந்த மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடிய கிரகங்கள் கூட ராஜயோகத்தை செய்துவிடும். அது எவ்வாறு என்பதை ஒரு எடுத்துக்காட்டு ஜாதகத்துடன் காண்போம்.  பின்வரும் இந்த ஜாதகத்தை கவனிக்கவும்.

 

மிதுனம் லக்கினம், சிம்மம் ராசி, மகம் நட்சத்திரத்தில் பிறந்த, இந்த ஜாதகத்திற்கு லக்கினாதிபதி புதன் மற்றொரு திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது, ஒரு திரிகோண ஸ்தானதிபதி  மற்றொரு திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.  

  5ஆம் இடத்து அதிபதியான, சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில், நிற்கிறார். ஒன்பதாம் இடத்து அதிபதி தனஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆக 1,5,9 என்ற மூன்று திரிகோணங்களில், இரண்டு திரிகோண ஸ்தானங்கள், மிக வலுவாகவும் அதாவது சுக்கிரனும், புதனும் பொருத்தமான ஸ்தானாதிபதியான சனி, அதைவிட சற்று குறைவாகவும் அமர்ந்திருக்கிறார்கள். எனவே திரிகோணம் பலம் பெற்று விடுகிறது. 

  இதேபோன்று கேந்திர ஸ்தானங்களில் குரு பலம் பெறுகிறார். பத்தாவது கேந்திரத்தில் சுக்கிரன் பலம் பெறுகிறார். மீதமுள்ள இரண்டு கேந்திர ஸ்தானங்கள் ஆன லக்கின கேந்திரத்திலும், நான்காம் இடத்திலும், எந்த கிரகங்களும் இல்லை. எனவே கேந்திர ஸ்தானங்கள் 50% சதவிகிதம் பலம் பெற்று நிற்கின்றன.  திரிகோண ஸ்தானங்கள் 75% பலம் பெற்று நிற்கின்றன. 

  கேந்திர திரிகோண ஸ்தானங்கள் இவ்வளவு பலம் பெற்று இருந்தாலும், இந்த ஜாதகி வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது, என்பது கேந்திர திரிகோணங்களில் அமைந்திருக்கக் கூடிய கிரகங்களின் திசையில் அல்ல உபஜெய ஸ்தானம் எனப்படும். மூன்றாம் இடத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய செவ்வாய், சந்திரனுடன் இணைந்து சந்திர மங்கள யோகத்தை கொடுக்கிறது. சூரியன் பார்ப்பது சிவசக்தி யோகத்தை கொடுக்கிறது. சந்திரமங்கள யோகத்தில் நிற்கக்கூடிய சிம்ம ராசியை, மூலத்திரிகோண ராசியில் ஆட்சி பெற்ற குரு, 9-ஆம் பார்வையாக பார்ப்பது மிகப்பெரிய யோகம் ஆகும். இந்த யோகத்தினால் தான் இந்த ஜாதகம் செவ்வாய் திசையில் தமிழக முதல்வராக முதன் முதலாக பதவி ஏற்க முடிந்தது. ஆமாம் இந்த ஜாதகம் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடையது. 

  உபஜெய ஸ்தானத்தில் நிற்கக்கூடிய செவ்வாய் ஆட்சி கட்டிலில் இவரை அமர்த்தியது. இதனைத் தொடர்ந்து வந்த ராகுதசை அரசியலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வர வைத்தது. ராகுவும் உபஜெய ஸ்தானம் எனப்படும். பதினொன்றாம் இடத்தில்தான் பலம் பெற்றிருக்கிறார். பொதுவாக, ராகு, மேஷத்தில் நிற்பது சிறப்பு. அதுமட்டுமல்லாமல் லக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில், நிற்பது இன்னும் சிறப்பான ஒரு விஷயம். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் சந்திர மங்கள யோகம், சிம்மத்தில் நின்று குரு பார்வை பெறுகிறார். அதுமட்டுமல்லாமல், தசா நாதனான ராகுவையும் குரு பார்க்கிறார்.  எனவே இந்த குருவின் பார்வை செவ்வாய் மற்றும் ராகு தசையில் தமிழக அரசியல் களத்தில் அசைக்கமுடியாத ஒரு நபராக இரும்புப் பெண்மணியாக மாற்றியது. 

  இவருடைய ஜாதகத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. அதாவது ஒரு ஜாதகத்தில் எத்தனை யோக பாக்கியங்கள் இருந்தாலும், அவர்கள் வாழும் காலங்களில் சரியான பருவத்தில் அதாவது சரியான வயதில், அந்த யோகமான திசை ஒன்று அல்லது இரண்டு நடந்தாலே போதுமானது, இங்கு செவ்வாய் திசையும், ராகு தசையும், யோக தசையாக நடந்தது. அதற்கு முன்பாக நடந்த சந்திரன் சூரியன் திசைகள் சுகமாகவே தென்பட்டாலும், சிறியதாக இருந்ததால் படிப்பு மற்றும் திரைத் துறையில் நுழைவது போன்ற விஷயங்களுக்கு உதவி செய்ததே தவிர, செவ்வாய்திசை போலவோ, அல்லது ராகுதசை போலவோ, யோக பாக்கியத்தை கொடுத்து விடவில்லை. 

  சரியாக பார்க்கப் போனால் இந்த இரண்டு திசைகள் மட்டும் தான் இவருக்கு முழுமையான யோகத்தைச் செய்தது. அதை, முழுமையாக இவர் அனுபவிக்கவும் முடிந்தது. எனவே ஒருவருடைய ஜாதகத்தை பொருத்தவரை எல்லா கிரகங்களும் மோசமான நிலையில் தான் அமர்ந்து இருக்கின்றன கஷ்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன், என்றெல்லாம் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். இதெல்லாம் அடுத்தடுத்து தனது வாழ்க்கையில் காணக்கூடிய தோல்வியின் அடிப்படையிலேயே வருகிறது. 

  ஏதாவது ஒரு தசை, யோக தசையாக  அமைந்து கூட அந்த திசையில் செய்யும் யோகம், வாழ்நாள் முழுமைக்கும் பலன் அளிப்பதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு யோக தசையில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம், மற்ற எந்த விதமான பிரச்சனைகள் தான் வாழும் காலங்களில் ஏற்பட்டாலும் வேலை என்பது நிலையான ஒன்றாக மாறிவிடுகிறது. அதை வைத்து அவருடைய வாழ்க்கையை, அவர் செம்மைப் படுத்திக் கொள்வார். வேறு ஒருவருக்கு ஒரு யோக தசையில் வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது, என்று வைத்துக்கொள்வோம்.  அந்த திசை பத்து வருடங்களோ, 17 வருடங்களோ, அல்லது 18 வருடங்களோ, நடக்கிறது என்றால் அந்த திசையில் அவர் சம்பாதிக்கும் சம்பாத்தியம் அடுத்து வருகின்ற திசை, அந்த அளவுக்கு யோகமாக இல்லாவிட்டால் கூட அவர்களுடைய வாழ்க்கை தரமானது முற்றிலுமாக கீழே இறங்கி விடுவது இல்லை. இதை நாம் கண்கூடாக பலருடைய வாழ்க்கையில் பார்த்து இருக்கலாம். 

 

ஆனால், விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. ஒரு சிலர் கோடி கோடியாக சம்பாதித்தாலும் கடைசியில் தெருக்கோடியில் வந்து நிற்கின்ற நிலையில், இருக்கிறார்கள். இது அவர்களுடைய கர்மா என்று சொல்வதைவிட வேறு என்ன சொல்வது.

இவ்வளவு யோகத்தைச் செய்த குருபார்வை, தனது திசை வரும் பொழுது ஏழாமிடத்தில் தனித்து நிற்பது, பாதக ஸ்தானம் பலம் பெறுவது போன்ற, காரணங்களால் குரு திசையின் துவக்கத்திலேயே ஆயுளை முடித்து வைத்து விட்டது. 

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக திருச்சிற்றம்பலம்