பரிவர்த்தனை யோகமா? தோஷமா?

 image

பரிவர்த்தனை என்றாலே அதிக  யோகம் தான் அதில் சந்தேகமே இல்லை ஏன் தெரியுமா? ஒரு பரிவர்த்தனை இருந்தால் இரண்டு கிரகங்கள் ஆட்சி ஆகி விடும். 2 அல்லது 3 பரிவர்த்தனைகள் இருந்தால் அது ராஜயோகமாக பார்க்கப் படுகிறது. அதிலும் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் திசை நடத்தினால் இரட்டிப்பு பலன்களை கொடுத்து உன்னதமான நிலைக்கு ஜாதகரை உயர்த்தி விடும். 

இரண்டு கிரகங்கள் ஆட்சி பெறுவது என்பது சாதாரண யோகம் அல்லவே? ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ அமைந்து விட்டால் அந்த ஜாதகமே யோகமான ஜாதகம் ஆகும். அப்படியானால் இங்கு ஒரு பரிவத்தனையில் இரண்டு கிரகங்கள் பலம் பெறுவது ஜாதகரை குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக மாற்றி விடும். 

ஜோதிடம் என்பது ஒரு கட்டுக்குள் அடைபடுவது இல்லையே, வானில் சலனமாகிக்கொண்டு உள்ள வான் பொருள்களை வைத்து பலன்களை கண்டு பிடிப்பது என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை தான். பரிவர்த்தனை யோகத்தால் உலக புகழ் பெற்றவர்களும் உண்டு, வாழக்கையை இழந்தவர்களும் உண்டு. 

பரிவர்த்தனை யோகம் பாதிக்கவும் செய்யுமா?

ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போமா?

பின்வரும் ஜாதகத்தில் என்ன பரிவர்த்தனை இருக்கிறது என்று காணலாம்.

image

 துலாம் லக்கினம் மேஷம் ராசி ஜாதகம் இது செவ்வாய் கடக  வீட்டில் உள்ளார் , சந்திரன் மேஷம் வீட்டில் இருக்கிறார் எனவே இது சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்ற ஜாதகம். இந்த பரிவர்த்தனையால் இரண்டு கிரகங்கள் ஆட்சி பெறுகின்றன எனவே யோகத்தை வாரி வழங்கி விட்டதா என்றால் வாரித்தான் வழங்கி விட்டது ஆனால் எதிர்மறையாக!

செவ்வாய் திசை முதல் குடும்பத்தில் புயல் வீசியது, கணவன் மனைவி பிரிவினை அவமானம், தற்கொலை முயற்சி தோல்வி எல்லாம் நடந்து முடிந்து விட்டது. ஏன் இந்த பெண்ணுக்கு இந்த நிலை. பரிவர்த்தனை யோகத்தில் செவ்வாய் 7 ஆம் இடத்தில் ஆட்சி பெறுகிறது செவ்வாய் 7 மிடம் அல்லது லக்கினத்தில் இருந்து திசை நடத்தினால் அந்த குடும்பம் பிரிவினையை நோக்கி செல்லும் என்பது ஜோதிட விதி! 

ஆகவே பரிவர்த்தனையில் மேஷத்தில் 7 மிடத்தில் செவ்வாய்  ஆட்சி பெறுவதால் குடும்பத்தில் ஒற்றுமை கேள்விக்குரியாகி விட்டது இங்கு செவ்வாய் பரிவர்த்தனை பெறாமல் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று இருந்தால் இந்த குடும்பம் எந்த பாதிப்பையும் சந்தித்து இருக்காது. இங்கு பரிவர்த்தனையால் மட்டுமே பாதிப்பு வந்து விட்டது, 

நீச்ச பங்கராஜ யோகம் இல்லாமல் போனால் கூட செவ்வாய் திசை பிரச்சனைகளை கொடுத்தாலும் பிரிவினைகளை கொடுக்காது மேலும் தற்கொலை முயற்சி வரை செல்லாது. பரிவர்த்தனை தான் பலம் பார்த்து விட்டது. 

அடுத்து வரும் ராகு திசை இருக்கட்டும், செவ்வாய் திசையையே இந்த குடும்பம் தாண்ட முடியவில்லை. ஒருவேளை நீச்சபங்க ராஜயோகம் செவ்வாயிக்கு கிடைத்திருந்தால் ராகு திசை யோக திசையாக இருக்குமே தவிர தனித்த ராகு இரண்டில் இருந்தாலும் நன்றாகவே இருக்கும்! 

எந்த இடத்து அதிபதி எங்கு பரிவர்த்தனை பெறுகிறார் என்பதை விட அந்த பரிவர்த்தனையால் என்ன நடக்கும் என்று கணிப்பதே முக்கியமாகும். 8 ஆம் இடத்து அதிபதி பரிவர்த்தனை பெறுகிறார், 6 ஆம் இடத்து அதிபதி பரிவர்த்தனை பெறுகிறார் எனவே கெடுதல் தான் நடக்கும், 4 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் தான் நல்லது என்பதெல்லாம் இல்லை. பரிவர்த்தனையில் என்ன செய்யப்போகிறது என்பது தான் முக்கியம் 

கூடல் நகரத்து ஆட வல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக 

திருசிற்றம்பலம் !!