சனி செவ்வாய் சேர்க்கை சங்கடம் தருமா? சந்தோஷம் தருமா?
ஜோதிடத்தில் பொதுவாக சனி செவ்வாய் சேர்க்கை பிரச்சனையான ஒன்றாகவே பார்க்கப் படுகிறது காரணம் இருவரும் சேர்ந்து இருந்தால் அவர்கள் இருக்கும் பாவமும் அதற்க்கு ஏழாமிடமும் பாதிக்கப்படும் என்ற விதி ஜோதிடத்தில் உள்ளதுதான். அப்படியானால் சனி செவ்வாய் சேர்க்கை பாதகம் மட்டும் தான் செய்யுமா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சனி செவ்வாய் சேர்க்கை இருந்தும் சனி திசையிலோ அல்லது செவ்வாய் திசையிலோ யோகத்தை செய்வதும் உண்டு. இந்த திசை நடப்பதாலேயே வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகளைப் பெற்று வெற்றி பெறுவதும் உண்டு. எப்படி என்று பார்க்கலாம் ! இந்த இரு கிரக சேர்க்கையில்
- செவ்வாய் அல்லது சனி ஏதாவது ஒரு கிரகம் ஆட்சியாகவோ உச்சமாகவோ அமர்ந்து விட்டால் அந்த இணைவு யோகமாக வேலை செய்யும் இம்மாதிரியான கிரக சேர்க்கையில் சனி திசையோ செவ்வாய் திசையோ நடந்தால் அந்த காலங்களில் ஜாதகர் மிகுந்த யோகத்தை அனுபவிப்பார்.
- இருவருமே பலமாக அதாவது ஒரு கிரகம் ஆட்சியாகவும் ஒரு கிரகம் உச்சமாகவும் இருந்தால் , மகர ராசியில் இந்த இணைவு ஏற்ப்படுகிறது என்றால் சனி ஆட்சியாவும் செவ்வாய் உச்சமாகவும் இருக்கும் அல்லவா? இப்படி இணைவு இருந்து இருவரும் வக்கிரம் ஆகாமல் இருந்து திசை நடக்குமானால் அது யோகமாகவே இருக்கும்
- மேஷத்தில் செவ்வாய் ஆட்சியாகவும், சனி நீசமாகவும் இருக்கும் அல்லவா, இந்த இணைவு பெற்று திசை நடக்கும்போது அது மிக யோகமாகவே செயல்படும். சனி செவ்வாய் சேர்க்கை மேஷத்தில் அமைய பெற்றவர்கள் நிறைய சொத்துக்கள் வாங்குபவர்களாக அல்லது அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்களாக , உணவுப் பொருள் , பாதுகாப்பு , எரிபொருள் துறையில் வேலை பார்ப்பவராக இருப்பார்கள். சட்டென உணர்ச்சிவசப் படும் இவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால் நட்புக்காக எதையும் கொடுப்பார்கள்
- சனி உச்சம் பெற்று செவ்வாய் சேர்க்கை பெற்று துலாம் ராசியில் இருந்தால் பேரையும் புகழையும் பெறுபவர்களாக இருப்பார்கள். சுய சம்பாத்தியதில் சொத்துக்கள் சேர்ப்பார்கள். இந்த இணைவில் இருந்து சனி திசை நடந்து சுக்கிரன் அதாவது துலாம் ராசி அதிபதியும் உச்சமாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் நிலையான சொத்துக்களை அதாவது தன்னுடைய காலத்துக்குப் பின்னும் நிலைத்து நிர்க்கக்கூடிய சொத்துக்களை உருவாக்கி விடுவார்கள். மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அரசியல் தலைவராகவோ , சமுதாய தலைவராகவோ கை நீட்டி சுட்டிக்காட்டக் கூடிய ஒரு பிரபலமான மனிதராக இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலருக்கும் சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதை காணலாம். சேர்க்கை என்பது இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பது மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் இணைவையே குறிக்கும்.
- விருச்சிகம் ராசியில் சனி செவ்வாய் இணைவது, செவ்வாய் ஆட்சியாகவும் சனி பகையாகவும் இருந்தாலும் தான் பிறந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம்மாறி சென்று சொத்துக்கள் வாங்குவது. அரசியல் பதவிகளுக்கு வருவது, பூர்வீகத்தை விட வெளி இடங்களில் நல்ல பேரையும் புகழையும் பேரையும் எளிதாக பெற்றுவிடுவார்கள். ஆனால் டெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும் தனது சொந்த பந்தங்கள் இடையே நல்ல பேரை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும் என்னதான் பயணம் தனது கடும் முயற்சியில் சம்பாதித்திருந்தால்கூட ஊரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறான் அதனால் தான் இவ்வளவு பகட்டாக இருக்க முடிகிறது, என்றெலாம் எளிதாக தனது சொந்த பந்தங்களே பேசிவிடுவார்கள். இவர்களுக்கு விளம்பரம் செய்ய தனது சொந்தங்களே போதுமானது.
- சனி செவ்வாய் சேர்க்கை என்பது மகரம் ராசியில் இருந்தால் தனது கடுமையான உழைப்பால் தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கும் வேலை கொடுக்கக் கூடிய முதலாளியாக உருவெடுத்து விடுவார்கள்.
- கும்பம் ராசியில் இந்த சேர்க்கை இருந்தால் பெரிய நிறுவனங்களை வழிநடத்தக்கூடிய பொறுப்பான பதவிகளை அலங்கரிப்பார்கள். இவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். வேலை இல்லாமல் இருக்கும் நிலை இவர்களுக்கு வராது. புதிய புதிய உத்திகளை தனது வேலை காலங்களில் புகுத்தி கம்பெனியை ஒரு உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்வர். இவர்கள் வேலையை விட்டு விட்டு வந்து விட்டால்கூட பலகாலங்களுக்கு பெயர் நிலைத்து நிற்க்கும். நல்ல பொருளாதாரத்தை சம்பாதிக்கக் கூடிய யோகக்காரர்களாக இருப்பார்கள்.
- சனி செவ்வாய் திசை நடக்கும்போது இம்மாதிரியான பலன்கள் மிக வலுவாக நடக்கும். எளிதாக வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
- முக்கியமான விஷயம் திருமணம் என்று வரும்போது ஜோதிடரையும் வரன் தாய் தந்தையாரையும் மிகவும் குழப்பிவிட்டு விட வாய்ப்பு உண்டு என்பதால் திருமணம் சற்று கால தாமதமாகத்தான் நடக்கும்.
- சனி செவ்வாய் என்றவுடன் தெறித்து ஓட வேண்டியது இல்லை. ஆனால் சற்று நிதானமாக ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் எளிதில் பிடிபடும்.
எடுத்துக் காட்டாக பின்வரும் ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம், இதில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது, மேலும் தற்போது சனி திசை நடக்கிறது. இது என்ன செய்யும் என்பதை கணிக்க முயற்சிக்கவும். நானும் எனது கருத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

சனி திசையில் வெளிநாட்டுக்கு சென்று உயர்கல்வி படித்து நல்ல வேளையில் அமர்ந்துவிட்டார். தாய்நாட்டில் பொறியியல் கல்வியில் இளங்கலை முடித்து வெளிநாடு சென்று நல்ல நிலைமையில் இருக்கிறார். சனி செவ்வாய் சேர்க்கை என்பது கெடுக்க வேண்டும் என்றால் சுமார் 18 வயதுக்குப் பின்னர் இவருடைய கல்வியை தடை செய்து இருக்கவேண்டும். கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்குவதற்க்கு தற்போது முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். எப்படி சாத்தியம் ஆகிறது? அமெரிக்காவின் H1B விசாவைப் பெறுவதற்க்கு எவ்வளவு சிரமம் என்பது முயற்சி செய்பவர்களுக்கு தெரியும். அங்கேயே படித்தவர்களுக்குக்கூட அனைவருக்கும் உடனே கிடைத்து விடுவது இல்லை. இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் ஆனது? சனி செவ்வாய் சேர்க்கை என்ற ஒரே காரணம் தான் என்பதை புரிந்துகொள்ள நேரம் எடுக்காது என்று நினைக்கிறேன். இந்த சேர்க்கையில் புதன் இருப்பதற்க்கு இன்னும் நீளமாக பலன்களை எழுதிக்கொண்டே செல்லாம்.
எனவே சனி செவ்வாய் சேர்க்கை அல்லது சமசப்தம பார்வையை பார்த்தவுடன் இந்த ஜாதகம் தோஷ ஜாதகம் என்றோ அதிர்ஷ்டம் இல்லாத ஜாதகம் என்றோ முடிவுசெய்துவிடக் கூடாது.
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!
திருசிற்றம்பலம்!