ஜோதிடத்தில் பொதுவாக வக்கிரம் என்றாலே குழப்பம்தான்! வக்கிரம் பெற்ற கிரகங்கள் நேர்மறையான பலன்களைச் செய்யுமா? அல்லது எதிர்மறையான பலன்களை செய்யுமா? என்பது மிகப்பெரிய குழப்பம். சிறப்பு என்னவென்றால் ஒரு சில சமயங்களில் எதிர்மறையான பலன்களை வக்கிரம் பெற்ற கிரகங்கள் செய்யும் ஆனால் ஜாதகருக்கு அது நேர்மறையான பலனாக இருக்கும் இதனால்தான் வக்ர கிரகங்களைப் பற்றி பலன் எடுப்பதில் அனைவருக்கும் சற்று தடுமாற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கு இணங்க தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே வந்தால் மிக எளிதாக மற்றும் விரைவாக முடிவை எட்ட முடியும்
இயல்பாகவே வக்கிரம் பெற்ற கிரகங்கள் தமது இயல்பான பலன்களுக்கு எதிர்மறையான பலன்களை செய்யும் என்பதை மனதில் நன்றாக இருத்திக்கொள்ள வேண்டும் இந்த எதிர்மறையான பலன்கள் என்பது ஜாதகருக்கு நன்மையாக இருக்குமா இருக்காதா என்பதைத்தான் கூர்ந்து கவனிக்க வேண்டும் ஒரு எடுத்துக்காட்டாக லக்கினத்திற்கு பத்தாம் இடத்து அதிபதி வக்கிரம் பெற்ற நிலையில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்
உதாரணமாக மிதுன லக்கின ஜாதகத்தில் பத்தாம் இடத்து அதிபதி குரு மீனத்தில் ஆட்சி பெற்று வக்ரம் பெற்று இருப்பதாக எடுத்துக் கொண்டால் பலன் எவ்வாறு நடக்கும்? தொழில் ஸ்தானாதிபதி எனப்படும் பத்தாம் இடத்து அதிபதி வக்கிரம் ஆவதால் ஜாதகர் சொந்த தொழில் என்று எதையும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது அதிலும் குறிப்பாக குரு தசை நடக்கும் காலத்தில் சொந்த தொழில் செய்தால் நிச்சயமாக மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை கொடுப்பதற்கு வாய்ப்பு உண்டு ஒருவேளை தொழில் மிகச்சிறப்பாக வந்துவிட்டது என்றால் மிதுன லக்கின ஜாதகருக்கு உடல்ரீதியான தொல்லைகளை கொடுத்து விடும் காரணம் பாதகாதிபதியாக வருகிறார் ஆனால் ஆயுள் கண்டத்தை கொடுக்காது ஏனெனில் குரு வக்ரம் பெறுகிறார்
இந்த ஒரு கிரகம் சூழ்நிலை ஜாதகருக்கு யோகமாக இருக்குமா என்றால் ஒரு சிலருக்கு நிச்சயமாக யோகமாக தான் இருக்கும் எடுத்துக்காட்டாக பொறியியல் பட்டபடிப்பு படித்து விட்டு வெளிநாடு சென்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு 35 வயது அல்லது 40 வயதை ஒட்டி குரு தசை ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்திருக்கின்ற குருபகவான் சொந்த தொழில் செய்வதற்கு ஆசையைத் தூண்டிவிடும் குரு வக்கிரம் இல்லாதபட்சத்தில் சுய தொழிலில் நல்ல மேன்மையான பலன்களை அடைவார்கள்
ஆனால் இங்கு குரு வக்கிரம் என்ற நிலையில் சொந்த தொழில் செய்ய தைரியம் வராது மேலும் நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என்றெல்லாம் யோசித்துக் கொண்டு தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருப்பார்கள் அதுமட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் இடத்தில் நல்ல உயர்வான உத்தியோகத்தில் அமர்ந்து விடுவார்கள் அதாவது பிரமோஷன் மற்றும் ஊதிய உயர்வு அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு கிடைத்துவிடும்
அப்படியானால் வக்கிரம் பெற்ற குரு சுயதொழில் செய்ய விடாது அல்லது செய்ய முடியாது என்ற பலன் இந்த ஜாதகருக்கு யோகமாக தானே இருக்கிறது இதேபோன்று பிசினஸ் ஃபேமிலி இல் வந்த ஒரு ஜாதகருக்கு 40 வயதில் குரு தசை வருகிறது என்று வைத்துக் கொள்வோம் மிதுன லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் குரு வக்கிரம் பெற்று நிற்பதால் அந்த ஜாதகருடைய தொழிலில் குறிப்பாக சொந்த தொழிலில் தகப்பனாரிடம் இரும்பு பொறுப்பை எடுத்துக் கொண்டு தான் விரிவாக செய்வதாக கூறி தொழிலில் அதிக முதலீடு செய்து கஷ்டப்பட்டு விடுவார்
எனவே சொந்த தொழில் செய்யக்கூடிய அல்லது பிசினஸ் ஃபேமிலியில் வரக்கூடிய ஜாதகருக்கு இது யோகமான கிரக அமைப்பு அல்ல இவ்வாறு வக்ர கிரகங்கள் எதிர்மறையான பலன்களை கொடுப்பது ஜாதகருக்கு ஒரு சில சமயங்களில் யோகமாகவும் ஒரு சிலருக்கு தோஷமாக அமைந்து விடுவது உண்டு அதனால்தான் பொதுவாகவே வக்கிர கிரகங்களுக்கு பலம் கணிப்பது பஞ்சாயத்தாகவே இருக்கிறது
ஒரு வக்கிர கிரகம் எப்படி செயல்படும் என்பதிலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது வக்கிரம் பெற்ற ஒரு கிரகம் இன்னொரு வக்கிரம் பெற்ற ஒரு கிரகத்தின் சாரத்தை பெற்றால் எப்படியான பலன்களைச் செய்யும் என்பது இடியாப்பச் சிக்கல் தான் இங்குதான் ஒன்றுக்கு இரண்டு முறை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்க்க வேண்டும்
எடுத்துக்காட்டாக கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்து அதிபதி சனி வக்ரம் பெற்று மேஷத்தில் நீசம் பெற்று எட்டாம் இடத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் இந்த ஜாதகர் பூர்வீகத்தை விட்டு இடம்மாறி வேலைக்குச் சென்றார் என்றால் மிகச் சிறப்பான முன்னேற்றம் அவருக்கு கேரியரிலும் வாழ்க்கையிலும் இருக்கும் சனிபகவான் மேஷத்தில்சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரம் சாரம் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் இங்கு சுக்கிரன் வக்கிரம் பெற்று இரண்டாமிடத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால் சனி திசை இந்த ஜாதகரை குடும்பத்துடன் சண்டை போட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தி குடும்பத்திலிருந்து பிரித்து சென்றுவிடும் சுக்கிரன் வக்கிரம் இல்லாதபட்சத்தில் சுமூகமாக வேலைக்காக அல்லது தொழில் செய்வதற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வசித்து வருவார்கள் இங்கு சுக்கிரன் வக்ரம் என்பது குறிப்பிடத்தகுந்தது
இரண்டு வக்கிரமான கிரகங்கள் இவ்வாறு தொடர்பு கொள்ளும்பொழுது இரண்டு வக்கிர கிரகங்களுக்கும் எதிர்மறையான பலன்களை எடுத்து அதை ஜாதகருக்கு சாதகமான பலன்கள் கொடுக்குமா? அல்லது பாதகமான பலன்களை கொடுக்குமா? என்பதை கணிக்க வேண்டும் சற்றே தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாக இருக்கும் கொஞ்சம் பொறுமையாக செய்தால் பலன்களை எடுத்துவிடலாம் இதுபோன்ற நேரங்களில் தான் அனுபவம் கைகொடுக்கும்
எத்தனையோ ஜாதகங்களை பார்த்து பலன் கூறிய பின்னர் இது மாதிரியான சிக்கலான சூழ்நிலைகளை கையாள்வது மிக எளிதாக இருக்கும் வக்கிரம் பெற்று இருக்கக்கூடிய ஒரு கிரகம் ராகு அல்லது கேது சாரத்தில் நிற்கிறார் என்றால் பிரச்சனை ஏதுமில்லை வக்ர கிரகம் வாங்கி இருக்கக்கூடிய சாரநாதன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து யோகமாகவோ தோஷமாகவோ பலன்கள் நடைபெறும் அதாவது கேது சாரம் பெற்ற ஒரு வக்கிர கிரகம் என்ன மாதிரியான பலன் செய்யும் என்றால் லக்கினத்திற்கு கேது எந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதை பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமைவதற்கு வாய்ப்பு உண்டு இதை ஒரு எடுத்துக்காட்டுடன் காணலாம் பின்வரும் ஜாதகத்தை அவதானிக்கவும்
இந்த ஜாதகருக்கு அண்மையில் புதன் தசை ஆரம்பிக்க இருக்கிறது புதன் வக்கிரம் பெற்ற நிலையில் லக்கினத்தில் இருக்கிறார் அவர் வாங்கியிருப்பது சதயம் நட்சத்திர சாரம் அதாவது ராகு சாரம் வாங்கி இருக்கிறார் இந்த ஜாதகத்திற்கு ராகு லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார் 6-ஆம் இடத்தில் உள்ள ராகுவிற்கு ஜோதிடத்தில் பல பாடல்கள் மிக யோகமாக செல்கின்றன
அதுமட்டுமல்லாமல் இவருக்கு ராகு அமர்ந்திருப்பது கடகத்தில் யோகத்தைச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஎனவே புதன் தசை இவருக்கு நல்ல தசை ஆகவே நடைபெறும் அதுமட்டுமல்லாமல் ராகு வாங்கியிருப்பது புதன் சாரம் என்பது குறிப்பிடத்தக்கது எனவே புதனும் ராகுவும் சார பரிவர்த்தனையில் இருக்கிறார்கள் வக்கிரம் பெற்ற கிரகங்கள் ராகு-கேது களுடன் இணைந்து இருப்பது மிகச்சிறந்த யோகம் ஆகும்
ஆறாமிடத்தில் ராஜ யோகத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகு என்ன பலன்களை எல்லாம் கொடுக்க வேண்டுமோ அத்தனையையும் புதன் திசையில் கொடுத்துவிடுவார் என்ன ஒரே ஒரு பிரச்சனை புதன் அஷ்டமாதிபதி ஆகவும் வருவதால் வயிறு சம்பந்தப்பட்ட தொல்லை அல்லது முதுகு வலி கழுத்து வலி போன்றவற்றை கொடுப்பதற்கு வாய்ப்பு உண்டு அதுவும் புதன் தசை ஆரம்பித்த மறுநாளில் இருந்தே துவங்கிவிட்டது சற்றுக் காலம் செல்லும் ஆனால் இந்த ஜாதகருக்கு புதன் வக்கிரம் பெற்ற நிலையில் இருப்பதும் அவர் ராகு சாரம் வாங்கி இருப்பதும் மிக குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது அவர் கேட்டிருந்த கேள்வியை பார்க்கலாம்
C Thayananthan Nagercoil Sir என்னுடைய புதன் தசை எப்படி இருக்கும் எட்டுக்குடையவர் வக்ரம் பெற்று வக்ரம் பெற்ற மற்றொரு கிரகத்தின் நட்சத்திரத்தில் நிற்பதால் நன்மைகளை எதிர்பார்கலாமா? D.O.B 15:02:1981 Time. 07:54 காலை. இடம் நாகர்கோவில்
ஜோதிடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கும் வரை ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் ஓரளவுக்கு தெரிந்து கொண்டால் இது மாதிரி நமக்கும் குறைவான வந்துவிட்டதோ என்பதுபோன்ற பயம் இருக்கும் இருக்கத்தான் செய்யும் ஆனால் ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம் இந்த ஜாதகருக்கு புதன் தசை ஆகவே நடைபெறும் மிகச்சிறந்த முன்னேற்றங்கள் உண்டு ஆனால் பூர்வீகத்தில் இருக்க முடியாது என்பதுதான் குறிப்பிடத்தகுந்தது
இந்தக் கேள்வியை கேட்டு ஜாதகத்தை எடுத்துக்காட்டாக கொடுத்த நண்பருக்கு நன்றி
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்