திருமணம் நடக்குமா ?

இரண்டாம் இடத்து அதிபதியும் , ஏழாமிடத்து  அதிபதியும் மறைந்து விட்டால் திருமணம் நடக்குமா? 

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானத்தை குறிக்கும். ஒருவருடைய குடும்பம் எந்த அளவிற்கு சிறப்பாக அமையும்? மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்குமா? அல்லது குடும்பம் இருந்தும் இல்லாமல் இருக்குமா? என்பது போன்ற தகவல்களை நாம் இரண்டாமிடத்தை கொண்டே தெரிந்து கொள்கிறோம். சிலருக்கு குடும்பம் என்பது பிரச்சனையாகவே அமைந்து விடுகிறது. பெயருக்கு குடும்ப வாழ்க்கை என்று இருக்குமே தவிர அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை என்று ஒன்று இல்லாமலே போய்விடும்!  இதற்கு காரணம் இரண்டாம் இடத்து அதிபதி நீசம் பெற்ற நிலையில் நிற்பது, அல்லது 6 8 12ஆம் இடங்களில் மறைந்து நிற்பது, மேலும் பாவ கிரகங்களின் தொடர்பு இவைகளால் பாதிக்கப்பட்டு குடும்ப வாழ்க்கை என்பது பிரச்சனையான ஒன்றாக மாறிவிடுகிறது .

நிம்மதியான ஒரு குடும்ப வாழ்க்கைக்கு இரண்டாம் இடம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். அதனால்தான் இரண்டாவது வீட்டில் ராகு கேது சனி போன்ற பாவ கிரகங்கள் அமைந்திருப்பது சிறப்பானதாக எடுத்துக்கொள்வதில்லை! பொருத்தம் பார்க்கும் போது இதனை கவனமாக ஜோதிடர்கள் பார்க்கிறார்கள் .

அதேபோன்று 7-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணையை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். எடுத்துக்காட்டாக ஒரு ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி மனைவியை குறிக்கிறார், பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி தனக்கு வரப்போகின்ற கணவனை குறிக்கிறார், இந்த ஏழாம் இடமும், ஏழாம் இடத்து அதிபதியும் பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்துவிடுகிறது. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும் என்பது போன்ற வாழ்க்கை அமைந்து விடுகிறது .

ஒரு சிலருக்கு பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிடுகிறது!  மிக மென்மையான அன்பான குணவதியான ஒரு பெண்ணிற்கு முரட்டுத்தனமான ஒரு வாழ்க்கைத் துணை அமைந்து விடுவதும், அதே போன்று மிகவும் கோபப் படக் கூடிய ஆத்திரப்பட கூடிய ஆவேச படக்கூடிய ஒரு பெண்ணிற்கு மிக அமைதியான மனைவி சொல்லை தட்டாத நல்ல கணவர் அமைந்து விடுகிறார். ஒருவர் வேகமாக இருக்கும் பொழுது மற்றொருவர் தாழ்ந்து செல்வது குடும்பத்திற்கு நல்லது! அவ்வாறு விட்டுக்கொடுத்துச் செல்வது யார்? விட்டுக் கொடுத்துப் போவார்கள் என்பதை லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டு அதிபதியும் தான் நிர்ணயம் செய்வார்கள் 

லக்னாதிபதியை விட ஏழாம் இடத்து அதிபதி வலுவாக இருந்தால் தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வழிநடத்தும்! எடுத்துக்காட்டாக ஒரு ஆணின் ஜாதகத்தில் ஏழாம் இடத்து அதிபதி வலுவாக இருந்தால் அங்கு மனைவியின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கும். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் மனைவியை கலந்து கொள்ளாமல் செய்யமாட்டார். இதைத்தான் மதுரை மீனாட்சி ஆட்சி என்று சொல்வார்கள் மாறாக, லக்கினாதிபதி வலுவாக இருந்தால் கணவன் தான் வீட்டின் முழுப்பொறுப்பையும் எடுத்து பார்த்துக்கொள்வார்கள். மனைவி குடும்ப பொருளாதாரத்தை பற்றி சற்றும் கவலையின்றி நிம்மதியாக இருந்து கொண்டிருப்பார் .

லக்கினாதிபதியும் ஏழாம் இடத்து அதிபதியும் பகை கிரகமாக வந்து ஒன்றுக்கொன்று எதிரெதிரான இடங்களில் மாறி அமர்ந்து விட்டாலோ ! அல்லது பகை கிரகம் ஆகி ஒன்று சேர்ந்து நின்றாலோ! அவர்கள் வீட்டில்தான் யார் கணவன்? யார் மனைவி? என்பதை முடிவு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.  திருமணம் முடிந்து 10 வருடம் ஆனால் கூட யார் அந்த குடும்பத்தின் தலைவர்? யார் புருஷன்? பொண்டாட்டி? என்பது தெரியாமலே குடும்பம் ஓடிக்கொண்டிருக்கும்.

எனவே திருமணம் என்று செல்லும் பொழுது முதலில் இரண்டாம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது ஜோதிட ரீதியான உண்மைதான் இரண்டாமிடத்து அதிபதி எட்டில் மறைந்து நின்றால் அல்லது நீசம் பெற்று நின்றுவிட்டால் குடும்ப வாழ்க்கை என்பது பிரச்சினையாக செல்லும் என்றும் 7-ஆம் இடத்து அதிபதி அல்லது ஏழாமிடம் பாதிக்கப்பட்டால் வரும் வாழ்க்கை துணை தெளிவில்லாமல் பிரச்சினைகள் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் பார்த்தோம்.  இந்த இரண்டு கிரகங்களும் மறைந்து விட்டால், ஏழாம் இடத்து அதிபதியும் இரண்டாம் இடத்து அதிபதியும் மறைவு தானங்களில் அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் நடப்பது என்பது குதிரைக் கொம்பாக போய்விடும் அல்லது திருமணம் அமைந்தாலும் நிம்மதியான வாழ்க்கை இல்லாமல் பிரச்சனைகளை சந்திக்க கூடிய வாழ்க்கையாக இறுதியில் பிரிவினையை நோக்கி செல்லக்கூடிய வாழ்க்கையாக அமைந்து விடும் 

ஜோதிட ரீதியாக கொடுக்கக்கூடிய இந்த விதி, விதிவிலக்கு க்கு உட்பட்ட தான் இருக்கிறது காரணம் இரண்டாம் இடத்து அதிபதியும் ஏழாம் இடத்து அதிபதியும் ஒன்று சேர்ந்து மறைவு ஸ்தானங்களுக்கு சென்றுவிட்டால் அந்த ஜாதகத்திற்கு திருமணம் இல்லை என்பது ஜோதிட விதி என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இவ்வாறு மறைவு ஸ்தானங்களில் நிற்க கூடிய ஜாதகங்கள் ஆக இருந்தாலும் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்று சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள் அதனால்தான் விதிவிலக்குகள் விதி ஆகாது என்ற கருத்து வருகிறது 

இங்கே எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் இரண்டாம் இடத்து அதிபதியான சந்திரனும் ஏழாம் இடத்து அதிபதியான குருவும் எட்டாம் இடத்தில் மறைந்து விடுகிறார்கள் மேலும் குருவிற்கு இது நீச ஸ்தானமும் ஆகிறது பிறகு எவ்வாறு இவர்களுக்கு திருமணம் நடந்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்றால் அதிலும் ஒரு ட்விஸ்ட் உள்ளது 

இந்த ஜாதகருடைய திருமணம் காதல் திருமணம் ஆகும் இவருடைய மனைவி பிறந்தது இங்கிலாந்தில் படித்து முடித்து வேலைக்காக ஐரோப்பாவிற்கு வந்து வேலை செய்யும் இடத்தில் இந்த ஜாதகரை பார்த்து காதல் வயப்பட்டு மணம் முடித்திருக்கிறார் இவருடைய திருமணம் என்பது இந்தியாவில் பிறந்து ஐரோப்பா சென்று இங்கிலாந்து பெண்ணை மணமுடித்து என்று பல வித்தியாசங்களைக் இடையில் பயணிக்கிறது எனவேதான் இவர்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது இதே ஜாதகர் தனது தாய் நாடான இந்தியாவில் இருந்தாலோ அல்லது மனைவியின் தாய்நாடான இங்கிலாந்தில் வசிக்கும் முற்பட்டாலும் நிச்சயமாக பிரச்சனைகளை சந்திப்பார்கள் இரண்டும் இன்றி வேறு ஒரு நாட்டில் அந் நாட்டின் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள் என்னும் ஆச்சரியப்படத்தக்க அம்சம் என்னவென்றால் ஏழாம் இடத்து அதிபதி குருவின் திசையில்தான் இந்த திருமணம் நடந்துள்ளது ஆனால் அவர் எட்டாமிடத்தில் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார் இது எவ்வாறு சாத்தியப்படும் மிதுன லக்கினத்துக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆகும் ஏழாம் இடத்து அதிபதி குரு பாதிக்கப்பட்டிருந்தால் தான் அமைதியான குடும்பம் அமைய முடியும் எனவேதான் 8ஆம் இடத்தில் குரு நீசமாகி நின்றாலும் அமைதியான குடும்ப வாழ்க்கையை கொடுத்துவிட்டார் தற்பொழுது சந்திர தசை நடந்தால் இவர்களுக்கிடையில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு நடப்பு குரு திசை என்பதால் சந்திர திசை வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவே அமைதியான குடும்ப வாழ்க்கை எதிர்காலத்திலும் உறுதி செய்யப்படுகிறது

 ஆகவே ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடத்து அதிபதி ஏழாம் இடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களில் நோக்கிச் சென்று விட்டால் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நிச்சயமாக கிடையாது என்று கூறிவிட முடியாது அதற்கான விதிவிலக்காக இம்மாதிரியான ஜாதகங்களும் அமைகின்றன

அதனால்தான் ஜோதிடத்தை படித்து தெரிந்து கொள்வதை விட அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஜோதிடத்தில் ரகசியமாக இருக்கிறது 

கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக

 

 திருச்சிற்றம்பலம்